தருமபுரி அருகே அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையின் கை கால்களை பள்ளி மாணவர்கள் அமுக்கி விட்ட வீடியோ வெளியான நிலையில் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாவேரிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு பள்ளியில் சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வரும் கலைவாணி என்பவர் பள்ளி நேரத்தில், மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய மேசையின் மீது படுத்து கொண்டு மாணவ, மாணவிகளை கட்டாயப்படுத்தி கை கால்களை அமுக்கி விட வைத்துள்ளார்.
தலைமை ஆசிரியை கலைவாணி தினமும் இது போன்ற செயல்களில் ஈடுபடுத்தப்படுவதாகவும், இதுகுறித்து பெற்றோரிடம் கூறகூடாது எனவும் கூறி மாணவர்களை மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியையின் கை, கால்களை அமுக்கிவிட்டு பணிவிடை செய்யும் வீடியோ வெளியான நிலையில், அரூர் மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் தலைமையிலான குழுவினர் பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதேநேரம் பெற்றோர்களும் விசாரணைக்கு வந்த அதிகாரிகளிடம் தலைமை ஆசிரியையின் நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவித்தனர். அதன் பிறகு தலைமை ஆசிரியை கலைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து தலைமை ஆசிரியை கலைவாணி அப்பியம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்து மாவட்ட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இருந்தபோதிலும் தலைமை ஆசிரியையின் இது போன்ற செயலுக்கு அரசு சார்பில் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை மேற்கொண்டு இருக்க வேண்டும், ஆனால் சஸ்பெண்ட் செய்யாமல் பணியிடை மாற்றம், டிரான்ஸ்பர் செய்து உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.