திமுக கூட்டணி சுயநலம் நிறைந்தது; அதனால்தான் காங்கிரஸ் முன்கூட்டியே ஆட்சியில் பங்கு கேட்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுக கூட்டணியில் இணைந்துள்ள சூழலில், அதிகாரப் பகிர்வு மற்றும் துணை முதல்வர் பதவி குறித்த அவரது மறைமுக விருப்பம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என்ற கோரிக்கைகள் கூட்டணி கட்சிகளிடையே எழுந்து வரும் நிலையில், பிரேமலதாவின் இந்த நகர்வை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

பொன்னேரியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி,  தேர்தல் வருவதற்கு இன்னும் 2 மாத காலம் தான் உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்களாகிய நீங்கள் வாக்களித்து அமோக வெற்றியைத் தேடி தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

நம்முடைய கூட்டணி மிகவும் வலிமையானது. இந்த கூட்டணி வெற்றி பெற்று அதிமுக தான் ஆட்சியமைக்கும். இந்த கட்சியைச் சேர்ந்தவர் தான் முதலமைச்சர் வேட்பாளர். இதுவே தேசிய ஜனநாயக கூட்டணியின் நிலைப்பாடாக உள்ளது.

திமுக கூட்டணி அப்படியில்லை. ஆட்சியில் பங்கு கேட்க தொடங்கியிருக்கிறார்கள். இப்போது அந்த கூட்டணியில் குழப்பம் நிலவி வருகிறது. காங்கிரஸ் – திமுக இடையே விரிசல் ஏற்பட்டு விட்டது. அந்த கூட்டணி இன்னும் முழுமை பெறவில்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் நாங்கள் எப்போதும் உங்களுக்கு அடிமையாக இருக்கிறோம். எங்கள் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என கேட்கிறார்கள். அதனால் அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் வண்ணம் இடங்கள் வேண்டும் என கேட்கிறார்கள். தினம்தோறும் ஊடகத்தில் இதுதொடர்பான செய்தியைக் காணலாம். இதனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நிலைக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி கடையை விரித்து வைத்துள்ளார்.  ஆனால் கூட்டணிக்கு யாரும் வரவில்லை என தெரிவித்தார்.  ஆனால் எங்கள் தலைமையில் இருப்பது வலிமையான கூட்டணி, உண்மையான கூட்டணி, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக இணைந்த கூட்டணியாகும்.

அதேசமயம் உங்கள் கூட்டணி சுயநலமிக்கது. அதனால் தான் முன்கூட்டியே காங்கிரஸ் கட்சி திமுக நிலைமை அறிந்து ஆட்சியில் பங்கு கேட்டு இப்பவே குரல் கொடுத்து வருகிறார்கள். விசிக பட்டும்படாமல் இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்கிறார்கள். இப்போது புதிதாக ஒரு கட்சி (தேமுதிக) அந்த கூட்டணியில் சேர்ந்துள்ளது. அந்த அம்மா (பிரேமலதா) ஒரு மாதம் முன்னால் கடலூரில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் துணை முதலமைச்சர் பதவி வேண்டும் என கேட்கிறார். இப்படியிருக்கும் கட்சி எல்லாம் ஒன்று சேர்ந்து தான் திமுக கூட்டணி அமைத்திருக்கிறது. எனவே அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும். மக்கள் விரோத திமுகவுக்கு இந்த தேர்தலோடு நிரந்தர விடுதலை கொடுக்க வேண்டும்” என அவர் பேசினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version