காவிரி நீர் பிரச்சினையில் தமிழக அரசின் தோல்வியை மறைக்கவும், மக்களின் கவனத்தை திசைதிருப்பவும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக எம்.பி.க்கள் கூட்டத்தை தமிழக அரசு கூட்டி வருவதாக திமுக செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்தார்.

தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக அரசு அழைத்துள்ள எம்.பி.க்கள் கூட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “காவிரி விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சியாகவே இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. அந்தக் கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் பங்கேற்பார்களா, இல்லையா என்பது குறித்து கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார்,” என்றார்.

இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் வேளாண் மற்றும் நிதிநிலை அறிக்கையையும் டி.கே.எஸ். இளங்கோவன் விமர்சித்தார். “இந்த பட்ஜெட்டில் புதியதாக எதுவும் இல்லை. பெயர் மாற்றங்களைத் தவிர மக்களுக்கு பயனளிக்கும் உருப்படியான அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை. திமுக ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கே புதிய பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன,” என்று குற்றம்சாட்டினார்.

மீனவர்களுக்கான நிவாரணம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். “திமுக ஆட்சியில் மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக ரூ.8,000 வழங்கப்பட்டது. தேர்தல் பிரசாரத்தின் போது தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய், அந்தத் தொகையை ரூ.20,000 ஆக உயர்த்துவோம் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போது நிவாரணத் தொகையை ரூ.8,000-லிருந்து ரூ.7,000 ஆக குறைத்துள்ளனர். உயர்த்துவோம் என்று கூறிவிட்டு, குறைத்திருப்பது மக்களை ஏமாற்றும் செயல்,” என்றார்.

மேலும், தேர்தல் வாக்குறுதிகளுக்கும் பட்ஜெட் அறிவிப்புகளுக்கும் இடையே பெரிய முரண்பாடு இருப்பதாகக் கூறிய அவர், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத பட்ஜெட்டாகவே இது அமைந்துள்ளதாக விமர்சித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version