வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளால் (SIR) பல லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது. ஆனால், தகுதியுள்ள நபர்களின் வாக்குகள் நீக்கப்படக்கூடாது என திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், திமுக சட்டத்துறை செயலாளரும், மாநிலங்களை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தேர்தல் ஆணையம் முறையான தயாரிப்பு வேலைகளுடன் SIR-ஐ அணுகியுள்ளார்களா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “ஒருநாள் நடைபெறும் தேர்தலுக்கு பல்வேறு விதிகளை கடைபிடிக்கும் தேர்தல் ஆணையம், ஒரு மாதம் நடத்தும் SIR பணிகளை எந்த காலத்தில் நடத்த வேண்டும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

முழுக்க முழுக்க BLO-க்களை (வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள்) நம்பி மேற்கொள்ளப்படும் இந்தப் பணியில், அவர்களுக்கு ஒருநாள் மட்டுமே பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மக்களின் எதிர்ப்பு மற்றும் தேர்தல் ஆணையத்தின் அழுத்ததால் BLO-க்கள் சிரமப்படுகின்றனர்,” என பதில் அளித்தார்.

BLO-க்கள் அனைவரும் அரசு அலுவலர்கள் என பாஜக கூறுவது குறித்த கேள்விக்கு, “சட்டம் பற்றி தெரிந்துகொள்ள பாஜக விரும்புவதில்லை. தேர்தல் பணிக்காக அலுவலர்கள் எடுக்கப்பட்டால், அரசு அலுவலர்கள் தேர்தல் ஆணைய அலுவலர்களாக கருதப்படுவார்கள். இதற்கு திமுக என்ன செய்ய முடியும்?,” என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, SIR பணிகள் நிறைவடைய இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் இதுவரை பல்வேறு பகுதிகளில் படிவங்களே செல்லவில்லை என கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, “இதனால் பல லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது. தகுதியுள்ள நபர்களின் வாக்குகள் நீக்கக்கூடாது. இதனால்தான் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்து வருகிறோம். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். தனிமனிதன் வாக்குகள் நீக்கப்பட்டால் நிச்சயம் உச்ச நீதிமன்றம் செல்வோம்,” என்றார்.

மேலும், காங்கிரஸ் ஆட்சியில் SIR பணிக்கு எதிர்ப்பு தெரிவிக்காத திமுக இப்போது மட்டும் ஏன் எதிர்கிறது? என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது குறித்த கேள்விக்கு, “கடந்த 2004 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் வாக்காளர் பட்டியல் சரி செய்ய வேண்டும் என கூறியிருந்தார். தொடர்ந்து, அனைத்து தேர்தலிலும் வாக்காளர் பட்டியல் முறைப்படுத்த வேண்டும் என 100-க்கும் மேலான கடிதம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது. தகுதியற்ற நபர்கள், இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் பெயர் நீக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், தகுதியுள்ள ஒருவரின் பெயர் நீக்கக்கூடாது” என்று இளங்கோ கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version