தொலைநிலைக் கல்வி மூலம் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வழங்கப்படும் 20% இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்றும், நேரடியாகக் கல்லூரிக்குச் சென்று பயின்றவர்களுக்கு மட்டுமே இந்த இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்றும் கோரி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் மற்றும் கோவிந்தசாமி ஆகியோர் தாக்கல் செய்த இந்த வழக்கில், “அங்கீகரிக்கப்பட்ட கல்வித் தகுதி முழுவதையும் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 20% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. நேரடியாகக் கல்லூரியில் பயில்பவர்கள் முழுவதுமாகத் தமிழில் பயில்வது உறுதி செய்யப்படுகிறது. ஆனால், தொலைநிலைக் கல்வி வாயிலாகப் பயின்றவர்கள், எந்த வழியில் படித்தாலும், தமிழ் வழியில் பயின்றதாகச் சான்றிதழ்களைப் பெறுகின்றனர். இதனால், உண்மையாகத் தமிழ் மொழியில் பயின்றவர்கள் இந்த இட ஒதுக்கீட்டைப் பெற முடியாத நிலை உருவாகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) செயலர் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) தலைவர் ஆகியோர் இந்த விஷயத்தில் தவறான வழியைப் பின்பற்றுவதாகவும், இது தொடர்பாக மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே, “TNPSC மற்றும் TRB ஆகியவை நேரடியாகக் கல்லூரிக்குச் சென்று பயின்றவர்களுக்கு மட்டும் தமிழ் வழியில் பயின்றோருக்கான 20% இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்றும், தொலைநிலைக் கல்வியில் பயின்றோருக்கு இந்த இட ஒதுக்கீட்டை வழங்கக் கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்” என மனுதாரர்கள் கோரியிருந்தனர்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் மரிய கிளாட் அமர்வு, “இந்த வழக்கை தொடர்புடைய தனி நீதிபதி முன்பாகப் பட்டியலிட வேண்டும்” என உத்தரவிட்டது.