வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மலாக்கா ஜலசந்தி அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவிவருகிறது. மேலும், இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியையொட்டி, தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவிவருகிறது.
மலாக்கா ஜலசந்தி பகுதியில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறும் என்று வானிலை மையம் கணித்திருந்தது. அதன்படி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மேற்கு, வடமேற்கில் நகர்ந்து மேலும் வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலாக மாறும் என்று ஏற்கனவே கணிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் வலுப்பெறும் என்று மட்டுமே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல, தெற்கு இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடலையொட்டி, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக இன்று வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ராமேஸ்வரம் பகுதிகளில் கனமழை பெய்துவருவதை அடுத்து ராமேஸ்வரத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவு முழுவதும் காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அந்தந்த பள்ளிகள் நிர்வாகம் மாணவர்களின் நலம் கருதி விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
