சட்டமன்றத் தேர்தலையொட்டி, கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிலுவையில் உள்ள விவரங்களை தயார் செய்யும்படி அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது ஒரு சவரன் ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் அவசர பண தேவைகளுக்கு தங்க நகைகளை அடகு வைப்பது மக்களின் முக்கிய நிதி ஆதாரமாக விளங்குகிறது. அதாவது அடகு கடை மற்றும் வங்கிகளில் அதிக வட்டி என்பதால் பெரும்பாலான பொதுமக்கள் அதுவும் கிராமப்புறங்களில் உள்ளவர்கள் கூட்டுறவு வங்கியை நாடுகின்றனர். மற்றொரு காரணம் மாநில அரசுகள் கூட்டுறவு வங்கியில் வைக்கப்படும் நகைகடன் தள்ளுபடி செய்துவிடும் என்ற நம்பிக்கையிலும் வைக்கின்றனர்.
இந்நிலையில் திமுக 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிக்கு வந்தால், ஐந்து சவரன் வரையிலான தங்க நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்தனர். இந்த வாக்குறுதியானது குறிப்பாக ஏழை மக்கள், விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு உதவும் வகையில் அறிவிக்கப்பட்டது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் முயற்சிகளை மேற்கொண்டது. அந்த வகையில் 2021 செப்டம்பர் 13 அன்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 31 மார்ச் 2021 வரை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட ஐந்து சவரன் அல்லது அதற்கு குறைவான தங்க நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்.
தமிழக அரசு அறிவித்த இந்த உத்தரவால் சுமார் 13.12 லட்சம் பேர் பயனடைந்தனர், மொத்தம் 4,818.88 கோடி ரூபாய் மதிப்பிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. திமுகவின் தங்க நகைக் கடன் தள்ளுபடி வாக்குறுதி, 2021 சட்டமன்ற தேர்தலில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது மற்றும் ஆட்சிக்கு வந்த பிறகு இது பெருமளவு நிறைவேற்றப்பட்டது.
இதேபோல் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படுமா என்று மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தநிலையில், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிலுவையில் உள்ள விவரங்களை தயார் செய்யும்படி அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
