தமிழ்நாடு சட்டசபைக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அனைத்துக் கட்சிகளும், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளன.

ஆளுங்கட்சியான திமுக தனது தேர்தல் பணிகளில் மற்ற கட்சிகளை விட ஒரு படி மேலே சென்று புதுமையான முயற்சியைக் கையாண்டு வருகிறது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளை குறிக்கும் பிரம்மாண்ட டிஜிட்டல் கவுண்ட்டவுன் திரை அமைக்கப்பட்டுள்ளது.

அண்ணா அறிவாலயத்தின் நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் திரையில் ஸ்டாலின் படத்துடன் “ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்”, “திராவிட மாடல் 2.0” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

அறிவாலயத்திற்கு வரும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே தேர்தல் வெற்றிக்கான உத்வேகத்தை ஏற்படுத்தவும், இன்னும் எவ்வளவு காலம் களப்பணியாற்ற வேண்டும் என்பதை நினைவூட்டவும் இந்தத் திரை அமைக்கப்பட்டுள்ளதாகக் கட்சித் தரப்பில் கூறப்படுகிறது.

“மீண்டும் திமுக – இலக்கு 200” என்ற முழக்கத்துடன் தேர்தலைச் சந்திக்கும் திமுக, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 4, 2026-ஐ நோக்கி இன்னும் எத்தனை நாட்கள், மணிநேரம் மற்றும் நிமிடங்கள் உள்ளன என்பதை இந்தத் திரை நேரலையாகக் காட்டுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version