தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தொகுதிப் பங்கீடு தொடர்பான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைக்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீரென டெல்லி பயணம் மேற்கொள்கிறார். இன்று காலை 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து அவர் டெல்லிக்கு புறப்படுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதிப் பங்கீடு குறித்து கடந்த சில நாட்களாகப் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இருப்பினும், அதிமுகவின் பலமான கோட்டைகளாகக் கருதப்படும் கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில், குறிப்பிட்ட சில தொகுதிகளை பாஜக கேட்டு பிடிவாதம் காட்டி வருகிறது.
பாஜக மேலிடப் பார்வையாளர் பியூஷ் கோயல் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யத் தமிழகம் வரவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே தேசிய தலைமையைச் சந்தித்து ஒரு முடிவுக்கு வர இபிஎஸ் திட்டமிட்டுள்ளார். அந்தவகையில் இன்று மாலை டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஆகியோரை எடப்பாடி பழனிசாமி சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்குவதில் நிலவும் சிக்கல்களைத் தீர்க்கவும், அதிமுகவின் செல்வாக்குமிக்க இடங்களை விட்டுக் கொடுக்காமல் தொகுதிகளை உறுதி செய்யவும் இந்தச் சந்திப்பு மிக முக்கியமானது” என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, அதிமுக – பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று இரவு அல்லது நாளை வெளியாகலாம். மார்ச் 30-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கவுள்ளதால், இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியதும் அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
