தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் களம் அனல் பறக்கும் பிரச்சாரங்களால் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தலைத் தற்காலிகமாக நிறுத்தக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளில் வாஷிங் மெஷின், பணம் உள்ளிட்ட பல்வேறு இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வாக்காளர்களைக் கவர்ந்து வருவதாக அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய வாக்குறுதிகள் நேர்மையான தேர்தல் நடைமுறைக்கும், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கும் எதிரானது என்பதால், தேர்தலை உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
தேர்தல் ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாடுகளையும் மீறி, இலவசங்கள் மூலமாக ஜனநாயகத்தின் மாண்பு சிதைக்கப்படுவதாகத் தனது மனுவில் கே.கே. ரமேஷ் ஆதங்கம் தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சிகளும் தீவிரமாகத் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வரும் வேளையில், இந்த அவசர வழக்கு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்குமா அல்லது தள்ளுபடி செய்யுமா என்பது குறித்து எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஒருவேளை இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால், அது தேர்தல் களத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
