நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாகப் பார்க்கப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையதளங்களில் கசிந்துள்ள சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் கடந்த ஜனவரி மாதம் முதல் ரிலீஸ் தள்ளிப்போய் வந்தது. இந்த இழுபறி நீடித்து வந்த நிலையில், படத்தின் சில முக்கியக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து நேற்று முழுத் திரைப்படமும் HD பதிப்பில் இணையதளங்களில் கசிந்துள்ளது.

சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட இப்படத்தின் லீக் செய்தியால் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் (KVN) புரொடக்ஷன்ஸ் கடும் அதிர்ச்சியடைந்துள்ளது. இது தொடர்பாகச் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கசிந்த காட்சிகளையோ அல்லது படத்தையோ பகிர்வது கிரிமினல் குற்றமாகக் கருதப்படும் என்றும் அந்நிறுவனம் எச்சரித்துள்ளது. விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்பாக வெளியாகும் மிக முக்கியமான படம் என்பதால், இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட சதி என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர். மேலும், திரையுலகப் பிரபலங்கள் பலரும் இந்தத் திருட்டுத்தனமானச் செயலுக்குத் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், படம் லீக் ஆனதற்குத் தமிழக அரசும் (திமுக), பாஜக-வுமே காரணம் என ஆதவ் அர்ஜுனா நேற்று குற்றம் சாட்டியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனநாயகன் படத்தை இணையத்தில் தவெக-வின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவே திட்டமிட்டு வெளியிட்டிருப்பாரோ என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. சென்சார் கிடைக்காததால் படத்தை வெளியிட முடியாத சூழலில், அனுதாபத்தைத் தேடிக்கொள்ள இவர்களே இப்படிச் செய்திருக்க வாய்ப்புள்ளது.”

“திரைப்படத் துறையில் நடக்கும் தொழில்நுட்பக் கசிவுகளுக்கும் பாஜக-வுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. தோல்வியைத் தாங்க முடியாமல் மற்றவர்கள் மீது பழி போடுவது முறையல்ல.”

வினோஜ் பி.செல்வத்தின் இந்தக் கருத்துக்குத் தவெக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். “கோடிக்கணக்கான ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட படத்தை யாராவது தாமாகவே இணையத்தில் வெளியிடுவார்களா? படத்தின் வீச்சைத் தடுக்கவே இது போன்ற சதி வேலைகள் நடக்கின்றன” என ஆதவ் அர்ஜுனா தரப்பு பதிலடி கொடுத்துள்ளது.

திரைப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானதைக் குறித்துத் தவெக தரப்பில் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் வெளியாகிப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட ‘ஜனநாயகன்’ திரைப்படம், தற்போது அரசியல் சர்ச்சைகளின் மையப்புள்ளியாக மாறியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version