இம்மானுவேல் சேகரனின் குருபூஜையை முன்னிட்டு குடிநீர், கழிவறை, பொது போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரிய வழக்கை முடித்து வைத்து மதுரை அமர்வு உத்தரவு
மதுரை எஸ். ஆலங்குளத்தைச் சேர்ந்த பழனிவேல் ராஜன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், “சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனின் குருபூஜையை முன்னிட்டு குடிநீர், கழிவறை, பொது போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவதோடு, அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், “இம்மானுவேல் சேகரன் குருபூஜையை முன்னிட்டு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பிலும் அதனை ஏற்றுக் கொண்டனர். இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.