தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்படும் தனியார் நிறுவனங்களில் 75 சதவீத வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய தொழிற்கொள்கை தொடர்பான ஆலோசனைகளில், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் திட்டத்திற்கு சில அதிகாரிகள் மற்றும் முதலீட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் உண்மையாக இருந்தால், அது சமூகநீதிக்கு எதிரான செயல்.
அரசுத் துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில், படித்த இளைஞர்கள் தனியார் துறையையே நம்ப வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஆனால், பல நிறுவனங்கள் உள்ளூர் இளைஞர்களை புறக்கணித்து வெளிமாநிலத்தவர்களை அதிகளவில் பணியமர்த்துகின்றன.
தவெக அரசின் தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டு இளைஞர்களை 75 சதவீதம் வரை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி மற்றும் மின்கட்டண சலுகைகள் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை சட்டமாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அதனால் முதலீடுகள் பாதிக்கப்படவில்லை.
எனவே, தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமையை பாதுகாக்கும் வகையில், தனியார் நிறுவனங்களில் 75 சதவீத வேலைவாய்ப்பை தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வழங்குவது கட்டாயமாக்கப்படும் சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும்” என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
