உலகம் முழுக்க 2025ம் ஆண்டிற்கு விடை கொடுத்து 2026ம் புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். புத்தாண்டை மிகுந்த உற்சாகத்துடன் மக்கள் வரவேற்க தயாராகிவரும் நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும், கொண்டாடுபவர்கள் பாதுகாப்பாக கொண்டாடவும் சென்னை மாநகர் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு காவல் துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி, டிசம்பர் 31ம் தேதி மாலை 6 மணிமுதல், ஜனவரி 1ம் தேதி அதிகாலை 1 மணி வரையிலான கொண்டாட்ட நேரத்தில்  எந்த பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

” நட்சத்திர ஹோட்டல்கள், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் போன்ற இடங்களுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் முறையாகச் சோதிக்கப்பட வேண்டும். அவை பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். ஹோட்டல்களில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும். நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிலும், விருந்து நடைபெறும் இடங்களிலும் கூட கேமரா அமைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்காக தற்காலிக மேடைகள் அமைக்கப்படுமானால், அந்த மேடைகள் பாதுகாப்பாக உள்ளனவா எனச் சரிபார்க்க வேண்டும். தீயணைப்பு துறையிடமிருந்து தேவையான சான்றுகள் பெறப்பட வேண்டும். நீச்சல் குளத்தின் மீது அல்லது அதற்கு மிக அருகில் மேடை அமைக்கக் கூடாது. அனுமதி வழங்கப்பட்ட அரங்கு உள்ளேயே நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.

நீச்சல் குளத்திற்கு செல்லும் அனைத்து வழிகளும் மூடப்பட்டிருக்க வேண்டும். ஹோட்டலுக்கு வரும் வாகனங்கள் அந்த ஹோட்டலின் வாகன நிறுத்துமிடத்திலேயே நிறுத்தப்பட வேண்டும். சாலையில் வாகனங்களை நிறுத்தக் கூடாது. மதுபானங்கள் அனுமதி வழங்கப்பட்ட இடத்திலேயே வழங்கப்பட வேண்டும். உணவு மற்றும் மதுபான சேவைகள் அதிகாலை 1 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும். காவல்துறை நிர்ணயித்த நேர வரம்புகளை ஹோட்டல்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version