முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தராமல், திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருவதாக தம்பட்டம்
அடித்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறது திமுக அரசு. இதற்கெல்லாம் விடிவுகாலம் வெகு விரைவில் வர உள்ளது என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதி வாழ் மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
* அதிமுக ஆட்சியில் தரம் உயர்த்தப்பட்ட கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் போதிய மருத்துவர்கள் இல்லை எனவும், இம்மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகி வருவதாகவும் கூறியுள்ளார்.
*அதேபோல, சிதம்பரம் அரசினர் காமராஜர் பொது மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், படுக்கை வசதிகள் இல்லை..
* சிதம்பரம் நகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அங்கேயே எரிக்கப்படுவதால் பொதுமக்கள் அவதி..
* குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட குழிகளால் நகரம் முழுவதும் சாலைகள் சேதம்..
* 2019-2020-ம் நிதியாண்டில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டும், 4 ஆண்டுகளாக திட்டம் செயல்படுத்தப்படவில்லை..
என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள இபிஎஸ், இவற்றை எல்லாம் நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து வரும் 15-ம் தேதி அதிமுக சார்பில் காலை 10 மணியளவில், சிதம்பரம் காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
நிர்வாகத் திறனற்ற திமுகவின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பும் விடுத்துள்ளார்.