2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மாநில அரசியல் நிலவரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஆளும் திமுகவும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தங்களது கூட்டணிகளை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

இந்த சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) தமிழ்நாட்டில் தனது அரசியல் வலிமையை அதிகரிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் அடுத்த கட்ட அரசியல் முடிவு குறித்து அரசியல் வட்டாரங்களில் பரவலான பேச்சு நிலவியது. அதிமுக–பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இணைய வாய்ப்பு உள்ளது என்ற தகவல்கள் வெளியாகி, அரசியல் சூழலில் புதிய பரபரப்பை உருவாக்கின.

இதுவரை அதிமுக தலைமையுடன் கருத்து வேறுபாடு காரணமாக தனித்த அரசியல் பயணத்தில் இருந்த அவர், மீண்டும் பழைய அணிக்குள் வர முனைந்துள்ளார் என கூறப்பட்டது. ஏனென்றால், டிடிவி தினகரனை என்.டி.ஏ. கூட்டணியில் சேர்த்துக்கொண்டதால் ஓபிஎஸ்ஸிற்கும் கதவுகள் திறக்கப்படும் என்றும் கூறப்பட்ட நிலையில், அதிமுகவில் ஓபிஎஸ்ஸை இணைக்க வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறிவிட்டார். இருப்பினும், கூட்டணியில் இழுக்க பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி இருக்கையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா விரைவில் புதிய கட்சி தொடங்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவலால் அதிமுக- அமமுக கூடாரம் ஆடிப்போயுள்ளது. அம்மா ஆட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் சசிகலா. ஆனால், அந்த முயற்சிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். ஊடகங்களுக்கு மட்டும் முகம் காட்டி வரும் சசிகலா, தனது வீட்டில் இருந்தபடியே அதிமுகவில் பலரிடமும் ரகசியமாக பேசி வருவதாகக் கூறப்படுவது உண்டு. அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவாக ஸ்லீப்பர்செல்கள் இருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.

எனவே, சசிகலா புதிய கட்சி தொடங்கினால் தமிழக அரசியலில் அது பெரும் திருப்புமுனையாக மாறும். அவரது புதிய கட்சியால் அதிமுகவுக்கு மட்டுமல்ல, அனைத்து தரப்பு அரசியல் கட்சிகளுக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போதே சசிகலா போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்றதால் போட்டியிடவில்லை.

சசிகலாவை இணைத்துக் கொண்டால் முக்குலத்தோர் வாக்குகள் கணிசமாக கிடைக்கும். தென் மாவட்டங்களில் கூட்டணிக்கு வலு கிடைக்கும். சசிகலாவை கூட்டணி சேர்த்தால் அதிமுக வாக்குகள் பிரியாமல் ஆட்சிக்கு மீண்டும் வர வாய்ப்புள்ளது.

இதெல்லாம் சேர்த்து கணக்கு போட்ட எடப்பாடி பழனிசாமி, என்.டி.ஏ. கூட்டணியில் சசிகலாவை சேர்க்க இசைவு கொடுத்துள்ளாராம். இருப்பினும், இந்த கூட்டணியில் சேர சசிகலாவும் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், எடப்பாடி பழனிசாமி, தனது நெருங்கிய தொழிலதிபர் ஒருவர் மூலம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. அப்போது தன்னுடன் இருக்கும் பள்ளிப்பட்டு நரசிம்மன், முன்னாள் அமைச்சர் ஆனந்தன் ஆகியோர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று சசிகலா கேட்டாராம். இதனை கேட்ட எடப்பாடி பழனிசாமி, முதலில் ஆதரவு கடிதம் கொடுத்தால் சீட்டு பற்றி பேசலாம் என்று கூறிவிட்டாராம்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version