ஏழு ஆண்டுகளாக தாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்காததால், உங்களுடன் ஸ்டாலின் முகம் நடைபெறும் மண்டபத்தின் முன்பாக குழந்தைகளுடன் சாலை மறியல் ஈடுபட்ட குடும்பத்தினரால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் உத்தம்பாளையம் திடீர் நகரில் வசித்து வருபவர் ராஜா – தீபா தம்பதியினர். ராஜா வெளிச்சம் தொலைக்காட்சியின் தேனி மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வருகிறார்.இவர்கள் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக வீடு கட்டி அதில் குடியேறியுள்ளனர். இவர்களுக்கு இரண்டு சிறு குழந்தைகள் உள்ளன.
தாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு ராஜா மற்றும் தீபா தம்பதியினர் பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று உத்தமபாளையம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமிற்கு வந்து மனு அளித்துள்ளனர்.மனு அளித்தும் அதிகாரிகள் வாங்க மறுத்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ராஜா மற்றும் தீபா தம்பதியினர் தங்கள் குழந்தைகளுடன் தேனி கம்பம் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திலிருந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை செய்தனர். அப்பொழுது எங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றால் உங்கள் காலில் விழ வேண்டுமா எனக்கூறி ராஜா ஒவ்வொரு அதிகாரியின் காலிலும் விழுந்து அதிகாரியுடன் கெஞ்சி சம்பவம் அனைவரையும் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
நீண்ட நேர மறியல் போராட்டத்திற்கு பின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காண்போம் என அவர்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்.இந்த சாலை மறியலால் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து பாதிக்கப்பட்ட தீபா கூறுகையில்,
நாங்கள் பலமுறை முறையிட்டோம் எங்களுக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மேலும் நாங்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதாலே எங்களுக்கு மின்சார இணைப்பு தருவதற்கு மின்சாரத் துறையினர் மெத்தனம் காட்டி வருகின்றனர். தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுத்து மின்சாரத் துறை அதிகாரிகள் மீது துறை நீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், எங்களுக்கு உடனே மின்சார இணைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
