கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்காக ஆயிரக்கணக்கானோர் சென்னையில் இருந்து வெளியூர் சென்றும் வரும் நிலையில், போதிய அளவு விமானங்கள் இல்லாததால் விமானக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுநாள் (டிச.25) கொண்டாடப்படவுள்ளது. இதற்கு அடுத்த வாரமே புத்தாண்டு வருகிறது. இந்த சூழலில், தற்போது அரையாண்டு விடுமுறையும் தொடங்கியுள்ளதால், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். ரயில்களில் முன்பதிவு முடிந்து விட்டதால், சிறப்பு ரயில்களையும், பேருந்துகளையும் மட்டுமே மக்கள் நம்பியுள்ளனர். ஆனால், அவற்றிலும் தற்போது இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. அந்த அளவுக்கு பேருந்துகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
எனவே, அடுத்த தேர்வாக விமானம் மட்டுமே உள்ளதால் மக்கள் அதை நாடி செல்கின்றனர். இன்றும், நாளையும் சென்னை விமான நிலையத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன.
இதனால் தூத்துக்குடி செல்ல வேண்டிய பயணிகள் பெரும்பாலானோர், சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால் அந்த விமானங்களிலும் டிக்கெட்டுகள் முடிந்து விட்டன. இதன் காரணமாக, பெரும்பாலான பயணிகள் சென்னையில் இருந்து பெங்களூர் சென்று அங்கிருந்து திருவனந்தபுரம், தூத்துக்குடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், தற்போது சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் விமானங்களிலும் பயணிகள் அதிக அளவில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இவ்வாறு பெங்களூரை சுற்றி செல்வதால் விமானக் கட்டணங்கள் தாறுமாறாக உயர்ந்துள்ளனர்.
உதாரணமாக, சென்னை -தூத்துக்குடிக்கு வழக்கமான கட்டணம் ரூ.4,100. ஆனால், தற்போது பெங்களூர் வழியாக சுற்றி போவதால் ரூ.13,400-ஆக உயர்ந்துள்ளது. சென்னை – திருவனந்தபுரம் வழக்கமான கட்டணம் ரூ.5,173. ஆனால், இப்போது பெங்களூர் வழியாக சுற்றி செல்வதால் ரூ.17,331-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை – மதுரை வழக்கமான கட்டணம் ரூ.4,248. இப்போது பெங்களூர் வழியாக சுற்றி செல்வதால்,ரூ.13,160-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை- திருச்சி வழக்கமான கட்டணம் ரூ.4,121. இது தற்போது ரூ.13,842-ஆக அதிகரித்துள்ளது. சென்னை – சேலம் வழக்கமான கட்டணம் ரூ.ரூ.3,093. இது, தற்போது பெங்களூர் வழியாக சுற்றி செல்வதால் ரூ.8,688- ஆக விலை உயர்ந்துள்ளது.
சென்னை- கோவை வழக்கமான கட்டணம் ரூ.4,140. ஆனால், இன்றும் நாளையும் கட்டணம் ரூ.8,448 வசூலிக்கப்படுகிறது. இதனால் கூடுதல் விமான கட்டணம் அதிகரித்திருப்போது, நேர விரயமும் ஏற்படுவதாக பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விமான சேவைகளை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
