இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தரிசனம் செய்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெறும் முன்னாள் இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமான் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை முன்னாள் அதிபர் ரணில் இன்று காலை விமான மூலம் மதுரைக்கு வந்தார்.
மதுரை விமான நிலையம் வந்த அவர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு மனைவியுடன் சென்றார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கோயிலில் கிழக்கு பகுதியான அம்மன் சன்னதியிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட ரணில் விக்ரமசிங்கே, அம்மன் சன்னதியிலும் சுந்தரேஸ்வரர் சன்னதியிலும் 30 நிமிடங்களுக்கும் மேலாக அவர் சாமி தரிசனம் மேற்கொண்டார். மேலும், அவர் கோயில் முன்பு நின்று தனது துணைவியாருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இலங்கை முன்னாள் அதிபர் ரனில் விக்ரமசிங்கே சாமி தரிசனம் செய்ய வந்த நிலையில், கோயில் வளாகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காவல்துறையினர் அவரை பலத்த பாதுகாப்புடன் கோயிலுக்கு உள்ளே அழைத்து சென்றனர்.
பின்பு செய்தியாளர்கள் அவரிடம் கச்சத்தீவு குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், பதில் ஏதுவும் கூறாமல் அவர் காரில் ஏறிச்சென்றார். தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெறும் முன்னாள் இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமான் இல்ல விழாவில் அவர் பங்கேற்கிறார். அங்கு தமிழகத்தில் உள்ள சில முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களை சந்திப்பார் என கூறப்படுகிறது.
