தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான நகர்வுகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்தபடியே கட்சித் தலைமை முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் எங்கு வேண்டுமானாலும் சென்று வர அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்த அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அங்கு ஆஜராக வேண்டும் என்று மிகவும் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் உள்ள அந்தத் தனியார் விடுதியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட அறைகள் தவெக எம்.எல்.ஏ-க்களுக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் வீடுகளுக்கோ அல்லது பிற இடங்களுக்கோ செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், ஆளுநரைச் சந்திக்கச் செல்வது அல்லது ஆதரவு கடிதத்தில் கையெழுத்திடுவது போன்ற அவசரப் பணிகளுக்காக எந்த நேரத்திலும் அழைப்பு வரலாம் என்பதால், அனைவரும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏ-க்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் தடபுடலாகச் செய்யப்பட்டுள்ளன. அங்கு தங்கியுள்ளவர்களுக்கு உயர்தர சைவம் மற்றும் அசைவ உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், சொகுசான தங்குமிட வசதிகளுடன் தவெக தலைமை அவர்களைக் கவனித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை பதவியேற்பு விழா நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் சிதறிவிடாமல் ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்யவே இந்த ஒரு மணி நேரக் கெடு விதிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version