சென்னையில் இன்று (25) ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,800 அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 1,08,800 க்கு விற்பனையாகிறது. இதேபோல், கிராமுக்கு ரூ.350 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,600-க்கு விற்பனை செய்யப்படுவதால், நகை வாங்கத் திட்டமிட்டுள்ள நடுத்தர வர்க்கத்தினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த 10, 11ம் தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதனிடையே தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரே நாளில் காலையில் சவரனுக்கு ரூ.7,600 குறைந்து, பின்னர் மாலையில் சவரனுக்கு ரூ.5,360 உயர்ந்தது.
தொடர்ந்து நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 340-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 720-க்கும் விற்பனையானது. இதன் தொடர்ச்சியாக 2-வது நாளாக நேற்றும் தங்கம் விலையில் ஏற்றம்-இறக்கம் காணப்பட்டது. நேற்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.340-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 720-ம் குறைந்தது. இதனையடுத்து மாலையில் திடீரென்று கிராமுக்கு ரூ.250-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரமும் உயர்ந்தது.
இந்தத் திடீர் விலை உயர்வுக்கு சர்வதேச சந்தையில் நிலவும் அசாதாரணச் சூழலே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் தங்கம் விலை 5% வரை உயர்ந்துள்ளது. பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதால், உலகளவில் அதன் தேவை அதிகரித்து விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இது நேரடியாக இந்தியச் சந்தையிலும் எதிரொலித்து, நம்மூர் நகைக்கடைகளில் விலையைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது.
தங்கம் விலை ஒரு சவரன் ஒரு லட்ச ரூபாயைத் தாண்டிச் சென்று கொண்டிருப்பது, சாதாரண மக்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமண சீசன் தொடங்கிவிட்ட நிலையில், இந்த விலை உயர்வு சாமானியர்களுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது. இருப்பினும், தங்கத்தின் மீதான முதலீடு தொடர்ந்து லாபகரமானதாக இருப்பதால், டிஜிட்டல் தங்கம் மற்றும் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்பவர்களுக்கு இது சாதகமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
