சர்வதேச சந்தையில் நிலவி வரும் பொருளாதார மாற்றங்களின் எதிரொலியாக, சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கம் விலை, இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்து நகைப்பிரியர்களுக்குச் சற்று நிம்மதியை அளித்துள்ளது.
சென்னையில் இன்று (மார்ச். 16 ) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,710-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், ஒரு சவரன் தங்கம் ரூ.400 குறைந்து ரூ.1,17,680 க்கு விற்பனையாகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக ஈரான் – இஸ்ரேல் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையிலும், சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்பனை செய்து லாபத்தை ஈட்டி வருவதால் விலை குறைந்துள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், உலகளாவிய சந்தையில் நிலவும் டாலர் மதிப்பின் மாற்றங்களும் இந்த விலை சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று சரிவைக் கண்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.4 குறைந்து ரூ. 276க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.4000 குறைந்து ரூ. 2,76,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை, தற்போது சற்று குறைந்து வருவது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. எனினும், சர்வதேசச் சூழலைப் பொறுத்து விலையில் வரும் நாட்களில் மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
