திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து ஒன்று சாலையோர பேக்கரிக்குள் புகுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து, பல்லடம் அடுத்த காளிவேலம்பட்டி பிரிவு அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது, பள்ளி மாணவர்களுடன் வந்த தனியார் பள்ளி பேருந்து ஒன்று திடீரென விதிகளுக்கு மாறாக சாலையின் இடதுபுறம் திரும்ப முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தவிர்க்க அரசு பேருந்து ஓட்டுநர் தெய்வம் என்பவர் சமயோசிதமாக வாகனத்தைத் திருப்பியுள்ளார். ஆனால், பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த பேக்கரிக்குள் அதிவேகமாகப் புகுந்தது. பேருந்து வருவதைக் கண்டு பேக்கரியில் இருந்த பொதுமக்கள் அலறியடித்து சிதறி ஓடியதால் நல்வாய்ப்பாகப் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
அரசு பேருந்து பேக்கரிக்குள் புகுந்த இந்த பதைபதைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
தகவலறிந்து வந்த பல்லடம் போலீஸார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநரின் அலட்சியமே விபத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி வாகனம் போக்குவரத்து விதிகளை மீறி எதிர்திசையில் வந்ததாகக் கூறப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
