புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கு சுகாதாரமான உணவு மற்றும் முறையான மருத்துவ வசதி வழங்காதது குறித்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த பைஃசல் ஹமீது என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்தாண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யபட்டு புழல் சிறையில் உள்ள தம்மை தனி சிறையில் வைத்து கொடுமை செய்வதாகவும், அடிப்படை தேவைகளான சோப் உள்ளிட்ட பொருட்களை வழங்க மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ள புழல் சிறையில் சரியான நேரத்திற்கு கைதிகளுக்கு உணவு வழங்கவில்லை எனவும், சுகாதாரமற்ற உணவு வழங்குவதாகவும், முறையான மருத்துவ வசதி இல்லை என்றும், சிறைக்கு புதிதாக வரும் விசாரணை கைதிகளை சமையல் மற்றும் சுத்தம் செய்யும் வேலைகளில் ஈடுபடுத்துவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புகார் அளித்த தம்மை தனி சிறையில் வைத்து சித்தரவதை செய்வதாகவும், தன்னுடைய குடும்பத்தினரை சந்திக்க அனுமதி மறுப்பதாகவும், இதுதொடர்பாக உள்துறை கூடுதல் தலைமை செயலாளரிடம் கடந்த ஜூன் மாதம் மனு அளித்தும் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.நதியா ஆஜராகி, இந்த புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.இதையடுத்து, வழக்கு தொடர்பாக சிறைத்துறை நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் , விசாரணையை ஆகஸ்ட் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version