சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி நிலம் வழங்கிய விவசாயிகள் மற்றும் சிபிஎம் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக கடந்த 1989 ஆம் ஆண்டு 960 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீட்ட தொகை வழங்காத நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நிலையில் 600 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும் தற்போது வரை அந்த இழப்பீட்டு தொகை வழங்கப்படாமல் இருப்பதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இணைந்து இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயில் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகளுக்கான உரிய வீட்டுத் தொகையை வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை கண்டித்தும் அவர்கள் முழக்கங்களையும் எழுப்பினர்.

முன்னதாக இது குறித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், தங்கள் பகுதிக்கு பல்கலைக்கழகம் வருகிறது என்ற ஆவலில் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரமான விவசாய நிலத்தை வழங்கியதாகவும் ஆனால் அதற்குரிய இழப்பீட்டுத் தொகையை அரசு தற்போது வரை வழங்கவில்லை எனவும் வருத்தம் தெரிவித்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் விவசாயிகளுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி 600 கோடி ரூபாயை தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என கூறியது. முதலமைச்சரிடம் தீர்ப்பின் நகலை கொடுத்து ஏறத்தாழ 3 ஆண்டுகளுக்குப் பிறகும் உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் தமிழ்நாடு அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் தாமதிக்கிறது. 45 ஆண்டுகளாக விவசாயிகள் இழப்பீடுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். நிலம் கொடுத்த விவசாயிகளை இப்படி காக்க வைப்பது நியாயமா என்றும் கேள்வியெழுப்பினார்.

தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருக்கிறது எனவே பணம் வாய்ப்பு இல்லை என்று சொன்னால் பயன்படுத்திய நிலத்தை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு ஒப்படையுங்கள் என்றார். 928 ஏக்கரில் 300 ஏக்கர் தான் பயன்பாட்டில் உள்ளதாகவும் 600 ஏக்கர் வெறுமனே உள்ளதால் தற்போது அது பல கோடி ரூபாய் மதிப்புள்ளது என்றும் பணத்தை கொடுங்கள் இல்லை என்றால் நிலத்தை கொடுங்கள் எனவும்
வலியுறுத்தினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Share.
Leave A Reply

Exit mobile version