தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி மற்றும் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திற்கு சென்று தாய் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.

https://x.com/narendramodi/status/2027957728254300431?

பிறந்தநாளையொட்டி மு.க.ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.

இதேபோல், ஆளுநர் ரவி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மு.க.ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியான நீண்ட ஆயுளுடனும் வாழ பிரார்த்திக்கிறேன்” என கூறியுள்ளார்.

கனிமொழி எம்.பி.வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சமூக நீதியையும் தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் இருகண் எனக் கொண்டு, நாடு போற்றும் நல்லாட்சியை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கி வரும் மாண்புமிகு முதலமைச்சர் – கழகத் தலைவர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். என்றும் உழைப்பிற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் அண்ணன் தளபதி அவர்கள், இன்னும் பல ஆண்டுகள் வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாட்டை வழிநடத்திச்செல்ல விழைகிறேன் என தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மக்களுக்கு சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அருள் புரியட்டும் என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில், சமூகநீதி, சமத்துவம், வளர்ச்சி ஆகிய இலக்குகளை முன்னிறுத்தி தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தி வரும் உங்கள் தலைமையே இன்னும் பல சாதனைகளை உருவாக்கட்டும். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! என்று பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறுகையில், தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! நலனும் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் எப்போதும் உங்களை சூழ வாழ்த்துகள். சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தை காக்கும் உங்கள் பயணம் தொடரட்டும் என்று தெரிவித்துள்ளார். 

திமுகவில் இணைந்த ஓ. பன்னீர் செல்வம் தனது வாழ்த்து செய்தியில், அரசியல் மரபையும், முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய திராவிடச் சித்தாந்தத்தையும் செயல்முறை ஆட்சியாக மாற்றி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேர்களை மேலும் வலுப்படுத்தி, மனிதநேய அரசியலை வழிகாட்டியாகக் கொண்டு மக்கள் நம்பிக்கையை வென்று வரும் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் நல்ல உடல் தேக ஆரோக்கியத்துடன், தளராத மனவலிமையுடனும் தொடர்ந்து மக்கள் சேவையில் முழுமையாக ஈடுபட்டு, தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல எல்லாம் வல்ல இறைவன் அருள் எப்போதும் துணையாக இருக்க பிரார்த்திக்கிறேன். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவை பெருவெள்ளமாக திரட்டி, மாபெரும் வெற்றி பெற்று, மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று சமத்துவம், வளர்ச்சி, மனிதநேயம் ஆகிய அடிப்படைகளில் மக்கள் நல ஆட்சியை மேலும் வலுப்படுத்தும் கழகத் தலைவர் மாண்புமிகு தளபதியார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோல் கேரள முதல்வர் பினராயி விஜயன், ப.சிதம்பரம், தொல். திருமாவளவன், தமிழிசை சௌந்தரராஜன், சீமான் உள்ளிட்டோரும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version