பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே 27 அன்று சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் 12 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், அரசு தரப்பில் இருந்து மே 29 அன்று ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன்படி, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நேற்று (மே 29, 2025) குரோம்பேட்டையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகப் பயிற்சி மையத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில், தொமுச, சிஐடியு உள்ளிட்ட 85 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

சுமார் ஏழு மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின் இறுதியில், ஆறு சதவீத ஊதிய உயர்வுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

முக்கிய அம்சங்கள்:

ஊதிய உயர்வு: போக்குவரத்து ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது.

சலவைப்படி உயர்வு: சலவைப்படி ரூ.160 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இரவுப் பணிப்படி உயர்வு: இரவுப் பணிப்படி ரூ.40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கூடுதல் ஊதியம்: இதன்மூலம், குறைந்தபட்சம் ரூ.1420 முதல் அதிகபட்சம் ரூ.6460 வரை ஊழியர்கள் கூடுதலாக ஊதியம் பெறவுள்ளனர்.

நிலுவைத் தொகை: நிலுவைத் தொகை 4 தவணைகளாக வழங்கப்படும்.

அமைச்சர் சிவசங்கர் கருத்து:

பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், “பேச்சுவார்த்தையில், 86 தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டன. ஒவ்வொரு சங்கமும் ஒவ்வொரு விதமான கோரிக்கையை முன்வைத்தார்கள். அந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து, பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து முடிந்தது. திமுக ஆட்சி அமைந்து, முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, 14 மற்றும் 15வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இதன்மூலம் போக்குவரத்து ஊழியர்கள் பயனடைய வாய்ப்புள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில், 86 தொழிற்சங்கங்களில், 64 தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டு, கையெழுத்துப் போட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version