திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள பொம்மனம்பட்டி கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமையான அருள்மிகு காளியம்மன் மற்றும் பகவதி அம்மன் வைகாசி உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், கிராம இளைஞர்கள் செய்த ஒரு புதுமையான ஏற்பாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விழாவின் முதல் நாளான நேற்று (மே 29, 2025) அம்மன் பூங்கரகம் ஜோடித்து, தாரை தப்பட்டை, வானவேடிக்கைகளுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பூஜைகளும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக நூற்றுக்கணக்கான பக்தர்கள் மாவிளக்கு, பால்குடம், அக்னிசட்டி எடுத்து, பொங்கல் வைத்து, கிடாவெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அம்மனுக்கு வாக்காளர் அட்டை:

இந்த ஆண்டு விழாவின் சிறப்பம்சமாக, ஊரின் காவல் தெய்வமாக விளங்கும் விநாயகர் முதல் முத்தாலம்மன், காளியம்மன், கன்னிமார், நாகம்மாள் என அனைத்து தெய்வங்களுக்கும் பிறந்த தேதி, வருடம், தொகுதி ஆகிய விவரங்களுடன் வாக்காளர் அடையாள அட்டை போன்று கிராம இளைஞர்கள் சார்பில் வடிவமைக்கப்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த வித்தியாசமான ஏற்பாடு பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த விழாவில் திண்டுக்கல், மதுரை, கோவை, நெல்லை, சென்னை, பெங்களூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற்றுச் சென்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version