விருதுநகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு கார் மீது டிப்பர் லாரி மோதிய பயங்கர விபத்தில், காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிப் படுகாயமடைந்தனர். அவர்களைத் தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி மீட்டனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வில்சன், சாந்தமேரி, நிர்மலா மற்றும் அந்தோணி முத்து ஆகிய 4 பேரும், சிவகாசியில் உள்ள தங்களது உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக காரில் சென்றுள்ளனர்.
விருதுநகர் சத்திரரெட்டியாபட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றுகொண்டிருந்தபோது, முன்னால் சென்ற டிப்பர் லாரியை முந்திச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த லாரி, காரின் மீது பலமாக மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் வலதுபுறம் இருந்த மையத் தடுப்பிற்கும் டிப்பர் லாரிக்கும் இடையே சிக்கி இரு பக்கமும் பலமாக நசுக்கப்பட்டதில், சொகுசு கார் முற்றிலும் அப்பளம் போல் நொறுங்கியது.
விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விருதுநகர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும், காவல்துறையினரும் இடுபாடுகளில் சிக்கியிருந்தவர்களை சுமார் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்டனர்.
பலத்த காயமடைந்த அவர்கள் நால்வரும் உடனடியாக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
