இந்த காலத்திலும் ஆண் குழந்தை தான் வேண்டும் என்ற மனநிலையை என்னவென்று சொல்வது, அதுவும் மனைவியை கொலை செய்யக்கூடிய அளவுக்கு செல்லும் பழமைவாத மனநிலை கொண்ட நபர் பொதுவெளியில் உலவுவது சரியல்ல.. முழுமையான பின்னணி என்னவென்றால்…
திண்டுக்கல் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த பார்வதிக்கும், சிறுமலையிலுள்ள தென்மலை, கருப்பசாமி கோயில் அருகே வசிக்கும் செல்வகுமார் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் முதல் குழந்தை மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது.
செல்வகுமார் ஆண் குழந்தை வேண்டும் என்று அடிக்கடி பார்வதியை துன்புறுத்தி உள்ளார். இதே காரணத்தைக் கூறி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பார்வதியை கம்பியால் தாக்கியுள்ளார். இதனை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர் கடந்த 29ஆம் தேதி சிறுமலை சென்று பார்வதியை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதனை அறிந்த திண்டுக்கல் மாவட்டம் அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் நேற்று இரவு மதுரை, வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் பார்வதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை எடுத்து பார்வதியின் உறவினர்கள், மாற்றுத்திறனாளிகள், அனைத்து இந்திய மாதர் சங்கத்தினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து பார்வதியின் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பார்வதியை கொலை செய்த கணவர் செல்வகுமாரை கைது செய்ய வேண்டும் எனவும், மூன்று குழந்தைகளுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினர். இதனை அறிந்து வந்த திண்டுக்கல் வடக்கு நகர் காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செல்வக்குமாரை கைது செய்யும் வரை இறந்த பார்வதியின் உடலை வாங்க மறுத்து அனைவரும் மருத்துவமனையில் உள்ளனர்.
