திமுக கூட்டணியில், வி.சி.க-வுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுகுறித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க. தலைவர் திருமாவளவன், வி.சி.க. தமிழ்நாட்டில் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் 6 தனித் தொகுதிகள், 2 பொதுத் தொகுதிகள். வி.சி.க-வின் உயர்நிலைக் கூட்டத்தில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைப் பெறவும், ராஜ்யசபா இடத்தைப் பெறவும் வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றினோம். அது குறித்து முதல்வரிடம் பேசினோம். 23 கட்சிகள் இருக்கும் கருத்தியல் சார்ந்து இயங்குகிற கூட்டணி, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் மதவாத சக்திகளுக்கு எதிராகத் துடிப்பாகச் செயல்படக்கூடிய கூட்டணி. இந்திய அளவில் மதவெறி, மதவாத சக்திகளிடம் இருந்து மக்களைப் பாதுகாக்கும் கூட்டணி என கூறினார்.

வி.சி.க. நலன் எவ்வளவு முக்கியமோ, அதைப்போல அவை அங்கம் வகிக்கும் கூட்டணியும் முக்கியம் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். இடதுசாரி ஜனநாயக அரசியல் தமிழகத்தில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். தற்காலிகமாக இந்தத் தேர்தலில் எங்களுக்கு என்ன லாபம் என்று வலதுசாரி சக்திகளுக்கு இடம் அளித்தால், இடதுசாரி மக்கள் பாதிக்கப்படுவார்கள், வலதுசாரிகள் வலுப்பெறுவார்கள். இடதுசாரிகளுக்கு 10, எங்களுக்கு 8, இதை எண்ணிக்கையில் பார்த்தால் குறைவாகத் தோன்றும். ஆனால், இது கொள்கையின் அடிப்படையில் அமைந்திருக்கும் கூட்டணி. ஒன்றிரண்டு தொகுதிகளுக்காகச் சண்டையிட்டு வெற்றியில் சேதத்தை ஏற்படுத்தக்கூடாது என்பதால்தான் சுமுகமாக முடித்திருக்கிறோம். தமிழக மக்களின் பேராதரவுடன் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றார்.

8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது, எங்களுக்கு மனநிறைவுதான். 8 என்பதே இலக்கை எட்டிப் பிடிப்பதுதான். எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து நாளை மறுநாள் முடிவு செய்யப்படும். புதுச்சேரியில் தி.மு.க, காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து 7 நாட்கள் நீடித்தது. அதனால், தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்தது. புதுச்சேரியில் காங்கிரஸின் அணுகுமுறையில் எங்களுக்கு அதிருப்தி இருக்கிறது. புதுச்சேரியில் ஒரு தொகுதியை எங்களுக்குத் தி.மு.க. தலைமை ஒதுக்கீடு செய்தது. அதில் காங்கிரஸ் விருப்ப மனு அளித்துள்ளார்கள், அவர்கள் இதுவரை திரும்பப் பெறவில்லை என்றார்.

புதுச்சேரியில் இன்னமும் குழப்பநிலை நீடித்து வருகிறது, அதனால், புதுச்சேரியில் 3 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட முடிவு செய்தோம். வேட்புமனுவைத் திரும்பப் பெறக் கால அவகாசம் இருப்பதால், தி.மு.க. தலைமை பொறுமையாக இருக்க அறிவுறுத்தி இருக்கிறார்கள். ராஜ்யசபா இடம் பெறுவது குறித்து தி.மு.க-விடம் வெளிப்படையாகப் பேசினோம். அதனைப் பரிசீலிப்பதாக உறுதி அளித்திருக்கிறார்கள். மற்றவர்களுக்கு இத்தனை தொகுதிகள் தந்துள்ளார்கள் என்று நாங்கள் ஒருபோதும் ஒப்பிட்டுப் பேசவில்லை. எங்கள் பலம், பலவீனம் எங்களுக்குத் தெரியும் என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version