ஸ்ரீபெரம்பூர் தொகுதியை விசிக கேட்டதால், செல்வப்பெருந்தகை சென்னையில் உள்ள ஒரு தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், நான் தொகுதி மாறுவதாக எங்கெங்கும் சொல்லவில்லை..நான் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் தலைமை அறிவிக்கும் என்று பதிலளித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தநிலையில், காங்கிரஸ் போட்டியிட உள்ள 28 தொகுதிகள் எவை குறித்து, தி.மு.க பேச்சுவார்த்தை குழு டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினருடன், காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழுவைச் சேர்ந்த தமிழக காங்கிரஸ் மேலிட பொருப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார், தேசிய செயலாளர் நிவேதித் ஆல்வா ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதியின் பட்டியலைப் திமுக குழுவுடன் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக குழுவுடன், காங்கிரஸ் சார்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம். நாங்கள் கேட்ட தொகுதியை அவர்கள் கேட்டார்கள், அவர்கள் கேட்ட தொகுதியை நாங்கள் கேட்டோம். ஒருசில தொகுதிகள் அவ்வாறு உள்ளது, பெரும்பாலான தொகுதிகள் உறுதியாகி உள்ளது. சென்னையிலும் தொகுதியை கேட்டுள்ளோம் என்றார்.
தொகுதியின் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி ஒப்புதல் வாங்குவோம். நான் தொகுதி மாறுவதாக எங்கெங்கும் சொல்லவில்லை..நான் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் தலைமை அறிவிக்கும் என்றார்.
இதேபோல், திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு, 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இரண்டிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. இந்தநிலையில், திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளை அடையாளம் காண்பதற்காக, ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா தலைமையிலான குழுவினர், தி.மு.க குழுவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா,
திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் விருப்ப தொகுதிகள் பட்டியலை கொடுத்துள்ளோம். ஏற்கனவே, நாங்கள் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாபநாசம், மணப்பாறை தொகுதியை தர வேண்டும் என கேட்டுள்ளோம். மேலும், வாணியம்பாடி, திருச்சி கிழக்கு தொகுதிகளை பரிசிலிக்கும் படியும் கேட்டுள்ளோம் என கூறினார்.
