விஜய் எங்கு சென்றாலும் உடன் வர அழைப்பதால் தேர்தல் பிரசாரம் செய்ய முடியாமல் முன்னனி நிர்வாகிகள் கொஞ்சம் புலம்புவதாக தவெக தரப்பு வட்டாரங்கள் சில தகவல்களை தெரிவிக்கின்றன.
அதாவது, தமிழக வெற்றிக்கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சி தலைவர் விஜய் சென்னை பெரம்பூரிலும் திருச்சி கிழக்கிலும் போட்டியிடுகிறார். இரு தொகுதிகளிலும் வேட்புமனுவை தாக்கல் செய்து விஜய் பிரசாரம் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து இன்று புதுச்சேரியில் பிரச்சாரம் செய்யும் விஜய் அடுத்தபடியாக சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லவுள்ளார். தேர்தல் பிரச்சரத்திற்காக இவ்வாறு செல்லும் விஜய் செல்லும் இடங்களுக்கெல்லாம் முன்னணி நிர்வாகிகளும் கட்டாயம் உடன் வர வேண்டும் என உத்தரவிடுகிறாராம்.
தவெக பொதுச்செயலர் ஆனந்த், தி.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு அவர் புதியவர். ஆகவே, தீவிர பிரசாரம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அதேபோல் வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா, திருப்பரங்குன்றத்தில் நிர்மல்குமார் உள்ளிட்டோரும் தெருத்தெருவாக பிரசாரம் செய்ய வேண்டிய சூழல் இருக்கிறது. ககோபிசெட்டிபாளையத்திற்கு செங்கோட்டையன் புதியவரவல்ல என்றாலும் அவரை தோற்கடிக்க அ.தி.மு.க., தீவிர பிரசாரம் செய்து வருவதால் அவரும் அங்கு களப்பணி ஆற்ற வேண்டியுள்ளது. ஆகவே, விஜய்யை தவிர முன்னனி நிர்வாகிகள் அனைவரும் அவரவர் தொகுதிக்குள் இருந்து வேலை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இந்நிலையில், தனது பிரசாரத்துக்கு அனுமதி வாங்குவதில் இருந்து பிரசாரம் செய்யும் வரை, முன்னனி நிர்வாகிகள் கட்டாயம் தன்னுடன் இருக்க வேண்டும் என விஜய் கட்டளையிடுகிறாராம்.
அவர்கள் உடன் இருந்தால் பிரச்சனைகளை சமாளிக்க முடியும் என்றும் பாதுகாப்பாக இருக்க முடியும் எனவும் விஜய் நினைப்பதால் இம்முடிவுக்கு அவர் வர அவரின் பேச்சை நேர்வாகிகளால் தட்ட முடியவில்லை. பெரும் தர்மசங்கடத்தில் அவருடன் சென்று வருகின்றனராம். முன்னனி நிர்வாகிகளுக்கு இந்த பிரச்சனை என்றால் வேட்பாளர்களுக்கு வேறு ஒரு அச்சம். அதாவது தவெக வேட்பாளர் பலருக்கும் தொகுதிக்குள் தனிப்பட்ட செல்வாக்கு இல்லை. விஜய் முகத்தை வைத்துதான் அவர்கள் ஓட்டு வாங்க வேண்டும். அதனால்தான் ‘நான் வேறு இல்லை; வேட்பாளர்கள் வேறு இல்லை’ என விஜய் சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஆனால் கொளத்தூரில் பிரசாரம் செய்த விஜய் வேட்பாளர் பெயரையே தவறாக சொல்லி விட்டார். மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கில் பிரசாரம் செய்த விஜய் அம்மாவட்டத்தில் உள்ள இதர தொகுதி வேட்பாளர்களின் பெயரை கூட சொல்லவில்லை. அவர்களுக்காக வாக்கு சேகரிக்கவில்லை. அடிப்படையான இந்த விஷயத்தை கூட விஜய் செய்யத் தவறிவிட்டார்.
இது போதாது என 106 வேட்பாளர்கள், வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்கள். அவர்களுக்கு தவெகவினர் தேர்தல் பணிகளை செய்ய மறுக்கின்றனராம். அவர்களை சமாதானம் செய்ய கட்சி உயர்மட்டத்தில் இருப்பவர்கள் முயற்சி செய்யவில்லை. மேலும் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் தொடருவதால், பல மாவட்டங்களுக்கு அவர் செல்வதே கேள்விகுறியாகி உள்ளது. ஆன்லைன் மூலம் பிரச்சரம் செய்யலாமா என விஜய் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. நிலைமை இப்படியே தொடர்ந்து, விஜய் பிரசாரம் செய்ய வரவில்லை என்றால், நமது கதி என்னவாகும் என்ற அச்சத்தில் பல வேட்பாளர்கள் உள்ளனர். இந்த பிரச்சனைகளை எப்படி சரிசெய்யப்போகிறார் விஜய்? பார்க்கலாம்.
