தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, உணர்ச்சிப்பூர்வமான உரை நிகழ்த்திய சி.ஜோசப் விஜய், தனது உரையை “நல்லாருப்போம்… நல்லாருப்போம்… எல்லாரும் நல்லாருப்போம்” என்ற நேர்மறையான வாசகத்துடன் தொடங்கினார். “நான் தேவதூதன் அல்ல, உங்களைப் போன்ற ஒரு சாமானிய மனிதன்; மன்னர் பரம்பரையில் இருந்து நான் வரவில்லை. பசி என்றால் என்ன என்பது எனக்கு நன்றாகவே தெரியும்” எனக் குறிப்பிட்ட அவர், இந்த அரசியல் பயணத்தில் சந்தித்த கஷ்டங்களையும், அவமானங்களையும் நினைவு கூர்ந்தார். “ஜோசப் விஜய் எனும் நான்” என்ற வாக்கியம் இன்று நிஜமாகியுள்ளது என்றும், சாமானிய மனிதனாகத் தன்னை ஏற்றுக்கொண்ட 8 கோடி மக்களின் நம்பிக்கைக்கு உண்மையாக இருப்பேன் என்றும் அவர் உறுதி அளித்தார்.

அரசின் நிதிநிலை குறித்துப் பேசிய அவர், முந்தைய அரசு கடன் சுமையை ஏற்றி வைத்துச் சென்றுள்ளதைச் சுட்டிக்காட்டினார். “அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வெள்ளை அறிக்கை வெளியிட்ட பிறகே பணிகளைத் தொடங்குவேன். எனக்குச் சற்று அவகாசம் கொடுத்தால் அனைத்தையும் படிப்படியாகச் சரிசெய்வேன்” என்றார். மேலும், “மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட தொடமாட்டேன். விஜய் தவறு செய்யமாட்டான், தவறுகளை அனுமதிக்கவும் மாட்டான். தவறு செய்யும் எண்ணம் யாரிடமாவது இருந்தால் அதை இப்போதே அழித்துவிடுங்கள்” என நிர்வாகத்தில் ஊழலுக்கு இடமில்லை என்பதை மிகக் கடுமையாக எச்சரித்தார்.

சமூக நீதி மற்றும் பாதுகாப்பைப் பொறுத்தவரை, தனது அரசு ஒற்றைத் தலைமையிலான அதிகார மையமாகச் செயல்படும் என்றும், சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இருக்காது என்றும் விஜய் தெரிவித்தார். “இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் ஆகிய மூன்றும் சேர்ந்ததுதான் எனது முகம்; சிறுபான்மையினருக்குத் தவெக அரசு என்றும் துணை நிற்கும்” எனக் கூறிய அவர், தனக்காகக் குரல் கொடுத்த காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விசிக தலைவர்களுக்குத் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

“குழந்தைகளால் தான் இது சாத்தியமானது; அவர்களின் எதிர்காலத்திற்காக அனைத்தையும் செய்வேன்” எனக் குறிப்பிட்ட அவர், “மீண்டும் சந்திப்போம்… இல்லையில்லை… மீண்டும் மீண்டும் சந்திப்போம்” எனக்கூறி தனது வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை நிறைவு செய்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version