கோவையில் சட்டவிரோதமாக செயல்பட்ட குவாரிக்கு விதிக்கப்பட்ட 32 கோடி ரூபாய் அபராதத்தை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றம், குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரித்து, குற்றவியல் நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம், புரவிபாளையம் கிராமத்தில் பட்டா நிலங்களில் நடத்தி வரும் குவாரிகளில் இருந்து சட்டவிரோதமாக கனிம வளங்கள் எடுத்ததாக கூறி செந்தாமரை என்பவருக்கு 32 கோடியே 29 லட்சத்து 77 ஆயிரத்து 792 ரூபாய் அபராதம் விதித்து கோவை உதவி ஆட்சியர் 2022-ம் ஆண்டு உத்தரவிட்டார்.
இதை எதிர்த்த மேல் முறையீட்டை விசாரித்த புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர், உதவி ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து, அபராதத் தொகையை 2 கோடியே 48 லட்சத்து 9 ஆயிரத்து 119 ரூபாயாகக் குறைத்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர், புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் உத்தரவை ரத்து செய்தும், 32 கோடியே 29 லட்சத்து 77 ஆயிரத்து 792 ரூபாய் அபராதம் விதித்த உதவி ஆட்சியர் உத்தரவை உறுதி செய்தும் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரியில் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து செந்தாமரை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, உரிமம் இல்லாமல் கற்களும், கிராவல் மண்ணும் எடுத்த குற்றத்துக்கு 5 ஆண்டு வரை சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கும் வகையில் சட்டப்பிரிவுகள் உள்ளதைச் சுட்டிக்காட்டி, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில், செந்தாமரைக்கு எதிராக புகார் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட கனிம வளத்துக்கு இணையான தொகையை வசூலிப்பதில் எந்த சமரசமும் இருக்கக்கூடாது என்பதால், 100 சதவீத தொகையை அபராதமாக விதித்து கோவை உதவி ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, மொத்த அபராத தொகையையும் செந்தாமரையிடம் இருந்து வசூலிக்க அரசுக்கு உத்தரவிட்டார்.
நேர்மையற்ற பேராசைக்காரர்களிடம் இருந்து பூமித்தாயை காப்பாற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டதாகக் குறிப்பிட்ட நீதிபதி, பேராசைக்காரர்களான குவாரி உரிமையாளர்கள், பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர், அபராதத்தொகையை குறைத்ததற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, ஆணையரின் உத்தரவை ரத்து செய்த இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த குவாரி மோசடியில் கள அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை என்ன பங்கு உள்ளது? என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் மூலம் விசாரணை நடத்தி, அவர்கள் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.