தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்ததாக குற்றம்சாட்டப்பட்ட கனடா குடியுரிமை பெற்றவரை மீண்டும் நாடு திரும்ப அனுமதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிநாட்டு குடியுரிமைப் பெற்றவர்கள் சட்டவிரோதமாக வாக்களித்ததாக 25 பேர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இதேபோல கைது செய்யப்பட்டு காவல் நிலைய ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட கனடா குடியுரிமை பெற்ற ஜிதேந்திரநாத் மீண்டும் கனடா திரும்பவதற்கு அனுமதி வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டபோது, பறிமுதல் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டை சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்றதாகவும், அதன்பிறகு கனடா திரும்ப விமான நிலையம் சென்றபோது, நீதிமன்ற உத்தரவில் வெளிநாடு திரும்ப அனுமதி வழங்குவதாக குறிப்பிடவில்லை என கூறி, கனடா செல்ல விமான நிலைய குடியேற்றத் துறை அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டதாக மனுவில் கூறியுள்ளார்.
தான் பணியாற்றும் நிறுவனத்தில் ஜூன் 8ஆம் தேதிக்குள் பணியில் சேரவில்லை என்றால் பணி நீக்கம் செய்துவிடுவார்கள் எனவும், இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்த பின் தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் ஆஜராக தயாராக இருப்பதாகவும் கூறி, கனடா செல்ல அனுமதிக்க வேண்டும் என மனுவில் கேட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், இந்த மனுவை ஏற்றுக்கொண்டு, ஜிதேந்திரநாத் கனடா செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
