சென்னையில் பிரபல தங்க நகை வியாபாரி வீடு, மார்க் ப்ராப்பர்ட்டீஸ் என்ற கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாகத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அண்மை காலமாக தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவது வழக்கமாகி வருகிறது. அரசியல் தலைவர்கள் முன்னாள் அமைச்சர்கள், இன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடந்து வரும் சுழுஅலில் தற்போது நகை வியாபாரிகளிடமும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
பல நூறு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தங்க நகை விற்பனையில் ஈடுபட்டு வரும் மோகன்லால் காத்தாரி என்பவரது வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். புரசைவாக்கம் தம்புசாமி தெருவில் வசித்து வரும் மோகன்லால் காத்தாரி என்பவரது வீட்டில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவு போலீசாரின் பாதுகாப்போடு சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சைதாப்பேட்டையின் ஸ்ரீநகர் காலனியில் உள்ள மார்பு பிராப்பர்ட்டீஸ் என்ற கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர் ராமகிருஷ்ண ரெட்டி என்பவரது வீட்டிலும் பத்துக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.