செங்கல்பட்டில் மது அருந்த பணம் தராததால் தாயை கொளுத்திய கொடூர மகனை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு நகர காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட நத்தம் கெங்கையம்மன் கோயில் தெருவை  சேர்ந்தவர் எஸ்தர் (65). இவரது மகன் விக்டர் ராஜேந்திரன் (45). திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரசு ஊழியராக பணியாற்றி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விக்டர் ராஜேந்திரன் வேலையில்லாமல் இருந்து வந்துள்ளார்.

இவரது மனைவி மற்றும் குழந்தைகள் ஆத்தூரில் உள்ள தாய் வீட்டில் வசித்து வரும் நிலையில் விக்டர் மட்டும் தனது தாயோடு செங்கல்பட்டில் இருந்து வந்துள்ளார். மது போதைக்கு அடிமையான விக்டர் ராஜேந்திரன் தினமும் மதுபோதையில் தனது தாயை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்  வழக்கம் போல் தன் தாயிடம் மது அருந்த  பணம் கேட்டு விக்டர் ராஜேந்திரன் சண்டையிட்டுள்ளார்.

அவர் பணம் இல்லை என கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த விக்டர் ராஜேந்திரன் தனது தாய் எஸ்தர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளார். எஸ்தரின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதியினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு 70 சதவீத தீக்காயத்துடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த எஸ்தர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த செங்கல்பட்டு நகர போலீசார் விக்டர் ராஜேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version