வைகை அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து அதிக நீர் திறப்பு காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 69 அடியை எட்டியிருந்த நிலையில் தொடர் நீர்வரத்தால் அணையின் நீர்மட்டம் 70 அடிக்கு மேல் உயர்த்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வைகை அணையில் நீர் இருப்பு அதிகம் இருந்ததன் காரணமாக வைகை அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, மாவட்டங்களில் உள்ள பெரியாறு பாசனப்பரப்பில் ஒருபோக பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து வைகை அணையில் இருந்து இன்று நீர் திறக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒருபோக பாசனப் பரப்பாகிய 85,563 ஏக்கர் நிலங்களுக்கும் மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசனப் பரப்பாகிய 19,439 ஏக்கர் நிலங்களுக்கும் என மொத்தமாக சேர்த்து 1,05,002 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதிக்காக இன்று காலை 9 மணி முதல் விநாடிக்கு 1,130 கனஅடி நீர் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது.
இந்த நிகழ்வில் தேனி, திண்டுக்கல், மதுரை,சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ்செல்வன், தேனி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.