தஞ்சையைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “கொரோனா நோய் தொற்று காலத்தில் கோவிட் பெட்டகம் அரசு பள்ளிகளுக்கு என கொள்முதல் செய்யப்பட்டது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களிடமிருந்து மட்டுமே கோவிட் பெட்டகத்தை வாங்க வேண்டும் போன்ற ஏராளமான விதிகள் வகுக்கப்பட்டன. இந்நிலையில் தஞ்சையில் உள்ள பள்ளிகளுக்காக தஞ்சையின் முதன்மை கல்வி அலுவலர் மூலமாக தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது.

அதே அளவு பொருட்களை வேறு சந்தைகளில் குறைவான விலைக்கு வாங்கலாம். அவற்றை விட 75% அதிகமாக விலை கொடுத்து கோவிட் பெட்டகம் வாங்கப்பட்டுள்ளது. இது அரசுக்கு மிகப்பெரும் வருவாய் இழப்பு. கோவிட் பெட்டகம் கொள்முதல் செய்வதில் நடைபெற்ற மோசடி தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரிக்கக்கோரி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு கோவிட் பெட்டகம் கொள்முதல் செய்யப்பட்டதில் நடைபெற்றுள்ள மோசடி தொடர்பாக விசாரிக்க தமிழக லஞ்ச ஒழிப்பு துறையின் இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, “பள்ளிக்கல்வித்துறையின் இணை ஆணையர் தர அலுவலரைக் கொண்டு விசாரணை நடத்தி, 3 மாதங்களில் அறிக்கையை செயலர் வசம் சமர்ப்பிக்கவும், அதன் அடிப்படையில் அவர் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version