“எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கும் கூட்டணியில் தான் இருக்க மாட்டேன்” என தொடர்ந்து கூறிவந்த டிடிவி தினகரன், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்தார்.
இருப்பினும், ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து மாற்றுக்கட்சிகளில் இணைந்து வரும் நிலையில், அவரது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு உற்று நோக்கப்படுகிறது. இந்தநிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஓபிஎஸை அம்மாவின் உண்மை தொண்டர் என குறிப்பிட்ட டிடிவி தினகரன், தன்னை வாழ வைத்த கட்சிக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய நேரம் ஓபிஎஸுக்கு வந்துவிட்டதாக கூறியுள்ளார்.
மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ”இணைவதற்கு ஓ.பன்னீர்செல்வம்தான் நல்ல முடிவு எடுக்க வேண்டும். சரியான முடிவு எடுத்து எங்களுடன் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைவதற்கு தேனியில் இருந்து நான் அழைப்பு விடுக்கிறேன்” என்றார் டிடிவி தினகரன். ”நான் தேர்தலில் போட்டியிடவில்லை. எனது உடன் இருப்பவர்களை வாய்ப்பு இருந்தால் அமைச்சர்களாக ஆக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை” என்று கூறினார்.
