தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமைப் பொறுப்பில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய தலைவர் செல்வப்பெருந்தகை மீது மேலிடம் அதிருப்தியில் இருப்பதாகவும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2024-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பரிந்துரையால் தலைவர் பொறுப்பை ஏற்றார் செல்வப்பெருந்தகை. இருப்பினும், அவரது குறுகிய கால பதவிக்காலத்திலேயே பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன. குறிப்பாக, திமுக-வுடனான தொகுதிப் பங்கீட்டில் ராகுல் காந்தி 35 இடங்களை எதிர்பார்த்த நிலையில், செல்வப்பெருந்தகை வெறும் 28 இடங்களுக்கு ஒப்புக்கொண்டது மேலிடத்தை அதிருப்தியில் ஆழ்த்தியது. 

தகுதியானவர்களைத் தவிர்த்துவிட்டு, தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக முன்னாள் மகளிர் காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் பகிரங்கமாகப் புகார் தெரிவித்தது டெல்லி வரை எதிரொலித்தது. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தியின் உரையைத் தவறாக மொழிபெயர்த்த விவகாரமும் அவர் மீதான நம்பகத்தன்மையைக் குறைத்தது.

செல்வப்பெருந்தகை தனது பதவியை ராஜினாமா செய்யத் தயார் என ஏற்கெனவே சூசகமாகத் தெரிவித்துள்ள நிலையில், அடுத்த தலைவர் யார் என்கிற போட்டி இப்போதே தொடங்கிவிட்டது. புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க மேலிடம் விரும்புவதாகத் தெரிகிறது. தற்போது இந்தப் பட்டியலில், கார்த்திக் சிதம்பரம், ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், திருநாவுக்கரசர், தங்கபாலு, KS அழகிரி உள்ளிட்டோர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சத்யமூர்த்தி பவன் வட்டாரங்களின்படி, “ஏற்கெனவே தலைவராக இருந்தவர்களை விட, புதிய திறமையான ஒருவரைத் தலைவராக நியமிக்கவே ராகுல் காந்தி விரும்புகிறார்” எனக் கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியான சில தினங்களிலேயே இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்பதால், தமிழக காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version