ஜப்பானின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஹொக்கைடோ தீவில் இன்று (ஏப்ரல் 27, திங்கட்கிழமை) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகுகளாகப் பதிவான இந்த நில அதிர்வு, அந்நாட்டு நேரப்படி அதிகாலை 5:24 மணியளவில் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் சரபெட்சு பகுதியில் சுமார் 81 கி.மீ ஆழத்தில் நிலைகொண்டிருந்ததாக ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திடீரென கட்டிடங்கள் குலுங்கியதால் உறக்கத்திலிருந்த மக்கள் அச்சமடைந்து வீதிகளுக்கு ஓடி வந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி ஆபத்து ஏதும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, பெரிய அளவிலான கட்டமைப்புச் சேதங்களோ அல்லது உயிர்ச் சேதங்களோ ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. இருப்பினும், நில அதிர்வு கடுமையாக உணரப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், பாறைகள் சரிந்து விழும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஜப்பானில் சமீபகாலமாக நில அதிர்வுகளின் தாக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் 20-ம் தேதி இவாட் மாகாணத்தில் 7.7 ரிக்டர் அளவில் மிக வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டு, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. வானிலை ஆய்வு மையம் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version