தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் இம்மாதம் 4ம் தேதி தொடங்கியது. அதுமுதல் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தியது. குறிப்பாக சேலம், ஈரோடு, நாமக்கல் உட்பட பல மாவட்டங்களில் 103 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் அடித்து நகர்த்தியது. சென்னையிலும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று (19.05.2025) விடிய விடிய மழை பெய்து வருகிறது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மணிக்கு 50 கி.மீ., வேகத்தில், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், நுங்கம்பாக்கம், மாம்பலம், வேளச்சேரி, கோயம்பேடு, விருகம்பாக்கம், மதுரவாயல், கிண்டி, பழவந்தாங்கல், மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், கூடுவாஞ்சேரி, மேடவாக்கம், வேளச்சேரி, பம்மல், ஆவடி உட்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. விட்டு விட்டு பெய்து வரும் மழையால் சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 4-ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரமானது, வரும் 28-ம் தேதி வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version