காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்திய சம்பவத்தில் பூவை ஜெகன் மூர்த்தி தான் மூளையாக செயல்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் காளம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார்.
திருமணத்துக்கு விஜயஸ்ரீ பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, பெண்ணை தேடி தனுஷ் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர் இல்லாததால், தனுஷின் சகோதரரை கடத்திச் சென்று, பின்னர் இரவு பேருந்து நிறுத்தம் ஒன்றில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக தனுஷின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே வி குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த போலீசார், பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைது செய்தனர். இந்த நிலையில், தன்னை காவல் துறையினர் கைது செய்யக் கூடும் என கூறி, முன் ஜாமீன் கோரி, ஜெகன் மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு நீதிபதி வேல்முருகனிடம் இருந்து நீதிபதி ஜெயசந்திரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடத்தல் சம்பவத்திற்கும் ஜெகன்மூர்த்திக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் இந்த வழக்கில் உள் நோக்கத்துடன் காவல்துறை அவரை சேர்த்துள்ளதாக வாதிடப்பட்டது.
மேலும் சிபிசிஐடி விசாரணைக்கு தான் முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதால் தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஜெகன் மூர்த்தியை சந்தித்த சிசிடிவி புகைப்பட காட்சிகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், விசாரணை சிபிசிஐடி’க்கு மாற்றப்பட்டு ஆரம்ப நிலையில் உள்ளதால் முன் ஜாமின் வழங்க கூடாது என்றும் ஒட்டு மொத்த கடத்தல் சம்பவத்துக்கும் மூளையாக செயல்பட்டது ஜெகன் மூர்த்தி தான் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஜெகன் மூர்த்திக்கும் ஏடிஜிபி ஜெயராமனுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளதால் முன் ஜாமின் வழங்க கூடாது எனவும் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த வழக்கில் இன்று மாலை தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.