திருப்பூரில் நகைகளை பாலீஸ் போடுவதாக கூறி 25 சவரன் நகைகளை மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பொம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர்கள் சேவுகமூர்த்தி – உமாமகேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். மகள் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வரக்கூடிய நிலையில், அவரது பள்ளித் தோழியின் தந்தை சேகர் என்பவரின் குடும்பத்துடன் உமாமகேஸ்வரி குடும்பத்தினர் அறிமுகமாகியுள்ளனர்.
கடந்த ஆண்டு மே மாதம் 15-ம் தேதி சேகர், உமாமகேஸ்வரியை அணுகி தான் நகை கடை வைத்திருப்பதாகவும், உங்கள் நகைகளை பாலிஸ் செய்து தருகிறேன் எனக் கேட்டுள்ளார். இதனை நம்பிய உமாமகேஸ்வரி, தனது ஆரம், நெக்லஸ், கம்மல் என சுமார் 25 சவரன் நகைகளையும் அதற்கான தொகையாக ரூ.1.50லட்சத்தையும் கொடுத்துள்ளார்.
20 நாட்களில் நகைகளை பாலிஸ் போட்டு தருவதாக கூறிய சேகர், பல மாதங்களாகியும் நகையை திரும்ப கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளார். இது குறித்து கடந்த ஜனவரி மாதம் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, எவ்வித முன்னேற்றமும் இல்லாததால், மாநகர போலீஸ் கமிஷனரிடம் மீண்டும் புகாரளித்தார்.
கமிஷனர் அலுவலகத்தின் அழுத்தத்தின் பேரில், திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புதிதாக பொறுப்பேற்ற காவல் ஆய்வாளர் பிரபாதேவி, மீண்டும் அவ்வழக்கை விசாரிக்க தொடங்கினார். ஆய்வாளர் தலைமையிலான போலீசார், மோசடியில் ஈடுபட்ட சேகரை கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 10 சவரன் நகைகள் மீட்கப்பட்டது.
