திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே உள்ள தேத்தாம்பட்டி கிராமத்தில், கோட்டை கருப்பணசாமி கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 15 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, ஆண்களுக்கு மட்டுமேயான பிரமாண்ட கறி விருந்து விடிய விடிய நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற இந்த மாபெரும் விருந்துக்காக, நேர்த்திக்கடனாகப் பெறப்பட்ட 500 ஆடுகள் பலியிடப்பட்டன. ராட்சச அடுப்புகளில், பிரம்மாண்ட பாத்திரங்களைப் பயன்படுத்தி இந்த 500 ஆடுகளின் கறி பிரசாதமாக சமைக்கப்பட்டது. கருப்பணசாமிக்கு படையலிடப்பட்ட பின்னர், அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான ஆண் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் இந்தக் கறி விருந்து பிரசாதமாக விநியோகிக்கப்பட்டது.
நத்தம், திண்டுக்கல், மதுரை என பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண்கள் இந்த சிறப்புமிக்க விழாவில் பங்கேற்றனர். இத்திருவிழா, அப்பகுதி மக்களின் பாரம்பரியத்தையும், பக்தி உணர்வையும் பறைசாற்றும் வகையில் அமைந்தது.