தமிழக அரசியலில் ‘நம்பிக்கை’, ‘நிதானம்’, ‘அனுபவம்’ ஆகிய வார்த்தைகளுக்கு இலக்கணமாகத் திகழ்பவர் கே.ஏ. செங்கோட்டையன். கொங்கு மண்டலத்தின் அசைக்க முடியாத கோட்டையாக விளங்கிய அவர், தற்போது தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த நிதித்துறை இலாக்கா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் தொடங்கி, கோட்டையின் நிதிப் பொறுப்பை ஏற்கும் வரையிலான அவரது நீண்ட நெடிய அரசியல் பயணம் தொகுப்பை பார்க்கலாம்.
அரசியல் தொடக்கம் மற்றும் எம்ஜிஆர் காலம்: 1972-ல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அதிமுகவைத் தொடங்கியபோது, அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட ஆரம்பகால மூத்த நிர்வாகிகளில் செங்கோட்டையனும் ஒருவர். 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக எம்.எல்.ஏ-வாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.
அதன் பின்னர் கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு மாறிய அவர், அத்தொகுதியின் செல்லப்பிள்ளையாக மாறினார். தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொகுதியில் 8 முறைக்கும் மேலாக வெற்றி பெற்ற மிகச் சில தலைவர்களில் செங்கோட்டையனும் ஒருவர்.
ஜெயலலிதா அமைச்சரவையில் முக்கியப் பங்கு: எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக மாறி, கட்சியின் தூண்களில் ஒன்றாகத் திகழ்ந்தார்.
முக்கியத் துறைகள்: ஜெயலலிதா அமைச்சரவைகளில் போக்குவரத்துத் துறை, வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை போன்ற மக்களின் அன்றாட வாழ்வோடு தொடர்புடைய முக்கிய இலாக்காக்களைத் திறம்பட நிர்வகித்தார். கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைப்பதிலும், தேர்தல் வியூகங்களை வகுப்பதிலும் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக விளங்கினார்.
2017 முதல் 2021 வரையிலான எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் செங்கோட்டையனுக்குப் பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கப்பட்டது. இவரது அரசியல் பயணத்தில் இந்த காலகட்டம் மிக முக்கியமானது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான புதிய சீருடைகள், கணினி வழிக் கல்வி, கரியர் கைடன்ஸ் மற்றும் பள்ளிப் பாடத்திட்டங்களை தற்காலத்திற்கு ஏற்ப மாற்றியமைத்தது எனப் பள்ளிக்கல்வித்துறையில் பல அதிரடி சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து மக்களின் பாராட்டுகளைப் பெற்றார்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக வலம் வந்த கே.ஏ.செங்கோட்டையன், கடந்த 2025 நவம்பர் மாதத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட உட்கட்சி மோதல் மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். சற்றும் தாமதிக்காமல், தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே அதிரடியாகத் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ தன்னை இணைத்துக் கொண்டார். தேர்தல் களத்தில் செங்கோட்டையனின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமும், கொங்கு மண்டல செல்வாக்கும் தவெக-வுக்கு மிகப்பெரிய பலமாக மாறியது.
2026 ஏப்ரல் சட்டமன்றத் தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு 16,620 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். தேர்தலுக்கு முன்பே விஜய்யை நம்பி களம் கண்ட அவரது அரசியல் முதிர்வுக்குப் பரிசாகவே, தற்போது தவெக அமைச்சரவையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ‘நிதித்துறை’ மற்றும் சட்டமன்ற அவையின் முன்னவர் பதவி செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களாகத் தமிழக அரசின் பல்வேறு துறைகளைக் கையாண்ட அனுபவம் உள்ளதால், மாநிலத்தின் பொருளாதார நிலையைச் சீரமைக்கவும், தவெக அரசின் புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளைத் திட்டமிடவும் இவரது அனுபவம் புதிய அரசுக்கு மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது.
ஈரோட்டு மண்ணில் எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டு, இன்று முதலமைச்சர் விஜய்யின் தவெக அமைச்சரவையில் தமிழகத்தின் கஜானாவை நிர்வகிக்கும் நிதியமைச்சராக உயர்ந்திருக்கும் கே.ஏ.செங்கோட்டையனின் பயணம், தமிழக அரசியலின் மிக முக்கியமான ஒரு அத்தியாயமாகும்.
