காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தனர்.
தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் காசிக்கும் இடையிலான ஆழமான நாகரிக பிணைப்பை கொண்டாடும் வகையில் காசி தமிழ் சங்கமம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. நேற்று (டிச.2) தொடங்கிய இந்நிகழ்ச்சி டிச.15 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் நிறைவடைகிறது. இதன் கருப்பொருளாக ‘தமிழ் கற்கலாம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், தமிழ்நாட்டிலிருந்து 1,400க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவற்றில், மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ஊடக வல்லுநர்கள், விவசாய துறைகளை சேர்ந்தவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் கைவினைஞர்கள், பெண்கள் மற்றும் ஆன்மீக அறிஞர்கள் ஆகியோர் அடங்குவர்.
காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சியின் கருப்பொருளாக ‘தமிழ் கற்கலாம்’ என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முறை, தமிழ் மொழியைக் கற்றுக்கொள்வதற்கும், கல்விப் பரிமாற்றத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது. இதன் வாயிலாக, மொழியியல் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சார ஒற்றுமையையும் வலுப்படுத்தப்படுகிறது. இதில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து 7 குழுக்கள் காசிக்கு வரவுள்ளன. அதே போல, உத்தரப் பிரதேசத்தில் இருந்து 300 மாணவர்கள் தமிழ்நாடு வந்து தமிழ் பயில உள்ளனர்.
மேலும், மாணவர்கள் காசி விஸ்வநாதர் கோயில், கேதார் காட், சாரநாத் மற்றும் தமிழ் பாரம்பரியப் பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். அத்துடன், தமிழ் பேசும் மக்களுடன் உரையாடுவார்கள்.
காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சியை ரயில்வே அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், சுற்றுலா அமைச்சகம், ஜவுளி அமைச்சகம், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் உள்ளிட்ட 10 துறைகள் ஒருங்கிணைக்கின்றன. அதேபோல, ஐஐடி மெட்ராஸ் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களும் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கின்றன.
