கார்த்திகை விரதம் மற்றும் தொடர் புயல் எச்சரிக்கையின் விளைவாக ஞாயிற்றுக்கிழமையான இன்று காசிமேடு மீன் சந்தை வாடிக்கையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழில் முக்கியமான மாதங்களில் ஒன்றான கார்த்திகை கடந்த 17 ஆம் தேதி தொடங்கியது. இந்த மாதத்தில் கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். மாதம் தொடங்கியது முதல் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கியுள்ளனர்.

அதேபோல், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை காசிமேட்டில் இருந்து பெருவாரியான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. ஒரு சில மீனவர்கள் மட்டும் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர்.

இந்நிலையில், சுமார் 40 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களும் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கரை திரும்பினர். இதனால், காசிமேடு துறைமுகத்தில் பெரிய வகை மற்றும் சிறிய வகை மீன்களின் வரத்து கணிசமாக இருந்தது.

ஆனால், இன்று ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்றாலும், கார்த்திகை மாத விரதம் மற்றும் கனமழை புயல் எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் மீன் வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் காசிமேடு மீன் மார்க்கெட் இன்று காலை முதலே வெறிச்சோடி காணப்பட்டது. கூட்டம் வராததாலும், குறைவான மீன் வரத்தாலும் மீன்களின் விலை குறைவாகவே இருந்தது.

அதன்படி, ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.1000, கொடுவா ரூ.700, இறால் ரூ.400 , நண்டு ரூ.350-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரம் விற்பனை செய்யப்பட்டதை விட குறைவான விலையிலேயே மீன்கள் விற்கப்பட்டன. மீன்கள் குறைந்த விலைக்கு விற்கப்பட்ட மீன்களை மீன் பிரியர்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.

காசிமேடு சந்தையில் மீன்கள் விலை:

மீன் வகை விலை (கிலோ)
1. வஞ்சிரம் ரூ. 1000
2. கொடுவா ரூ.700
3. சீலா ரூ. 450
4. பால் சுறா ரூ. 600
5. சங்கரா ரூ. 350
6. பாறை ரூ. 450
7. இறால் ரூ. 400
8. நண்டு ரூ. 350
9. நவரை ரூ. 150
10. பண்ணா ரூ. 120
11. காணங்கத்தை ரூ. 200
12. கடுமா ரூ. 300,
13. நெத்திலி ரூ. 150
14. கடவறா ரூ. 450
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version